1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (15:17 IST)

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு; நயினார் நாகேந்திரன் காரணமா? – வானதி சீனிவாசன் விளக்கம்!

தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி முறிந்துள்ளதற்கு நயினார் நாகேந்திரன் பேச்சு காரணமா என்பது குறித்து வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் அதிமுக – பாஜக இடையே நேற்று முதலாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும் இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து முடிவு எட்டப்படாத நிலையில் பாஜக தனித்து போட்டியிடுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுகவினர் கூறி வந்த நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் நயினார் நாகேந்திரன் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் கூட்டணி முறிவுக்கு நயினார் நாகேந்திரன் காரணமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதுகுறித்து பேசியுள்ள கோவை மாவட்ட பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கூட்டணி முறிவுக்கும் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இரு கட்சிகளும் அடிப்படை புரிதல்களுடன், நட்புணர்வுடனே தனித்து போட்டியிடும் முடிவை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.