1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 24 அக்டோபர் 2014 (14:56 IST)

‘சேடப்பட்டி சிங்கக்குட்டி’ - எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு வைகோ இரங்கல்

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
 
கலை உலகம், திராவிட இயக்கத்திற்கு வழங்கிய அருட்கொடையாம் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். மறைந்தார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன்; வேதனைக்குள்ளானேன். 
 
பேரறிஞர் அண்ணா இதயத்தில் தனித்ததோர் இடத்தைப் பெற்று, தி.மு.கழகத்தின் இலட்சிய வேங்கையாகத் திகழ்ந்தார். கொள்கையில் நிலைகுலையாத உறுதி கொண்டு இருந்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவரது தேனாம்பேட்டை வீட்டைச் சுற்றி வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியபோது, அஞ்சாமல் துப்பாக்கியோடு போய் நின்றார். எனவே, கழகத் தோழர்கள் அவரை ‘சேடப்பட்டி சிங்கக்குட்டி’ என்று அழைத்து மகிழ்ந்தார்கள்.
 
தமது தேனாம்பேட்டை இல்லத் திறப்பு விழாவுடன், பேரறிஞர் அண்ணா 50ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினைப் பொன் விழாவாகக் கொண்டாடினார். அண்ணாவுக்குப் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையுடன் 50 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்தார். அண்ணா மலேசியா சென்று தாயகம் திரும்பியபோது, சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்புக் கூட்டத்தில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். பேச்சு முத்தாய்ப்பாக அமைந்தது. தாம் நேசித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை முன்னிறுத்தி அவர் தயாரித்த ‘தங்க ரத்தினம்’ திரைப்படத்திலேயே தி.மு.க.வின் பழநி மாநாட்டுக் காட்சிகளை இடம் பெறச் செய்தார்.
 
1962 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கோட்டையாகத் திகழ்ந்த தேனி தொகுதியில் காங்கிரசைத் தோற்கடித்துச் சாதனை படைத்தார். 67 தேர்தல் களத்தில் அவருடன் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றேன். தென்மாவட்டச் சுற்றுப் பயணங்களின்போது உடன் சென்றேன். பேரறிஞர் அண்ணா இயற்கை எய்தியபோது, அங்கு நின்று கொண்டு இருந்த நடிகமணி டி.வி.நாராயணசாமியுடன் என்னையும் தமது காரில் ஏற்றிக்கொண்டு அண்ணா வீட்டுக்கு அழைத்துச் சென்றதை மறக்க முடியாது.
 
தேர்தல் களத்தில் பலமுறை வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், சிறுசேமிப்புத் துறைத் துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.
 
திரை உலகில் தனக்கென ஒரு தனிப் பாணியை வகுத்துக்கொண்டு பிரகாசித்தார். தமிழ் வசனங்களை உச்சரிப்பதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போலவே, கேட்போரின் இதயங்களைக் காந்தமாய்க் கவர்கின்ற குரலாக எஸ்.எஸ்.ஆரின் குரல் கணீரென ஒலித்தது. அதற்காகவே அவரது படங்களை நான் விரும்பிப் பார்ப்பது உண்டு.
 
‘முதலாளி, தை பிறந்தால் வழி பிறக்கும், சிவகங்கைச் சீமை, பூம்புகார், கை கொடுத்த தெய்வம், ஆலயமணி, பூமாலை, வைராக்கியம், ராஜா தேசிங்கு, சாந்தி போன்ற திரைப்படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். ‘காக்கும் கரங்கள்’ படத்தைப் பார்த்து விட்டு அண்ணா, ‘தம்பி இராஜேந்திரன் டாக்டர் சங்கராகவே மாறிவிட்டார்’ என்று பாராட்டினார். 
 
இன்று மருது பாண்டியர்கள் தூக்கில் இடப்பட்ட நாள். அவர்களது புகழ் பாடும் திரைப்படமாக, கவிஞர் கண்ணதாசன் தயாரித்த சிவகங்கைச் சீமையில், முத்தழகு பாத்திரத்தில் எஸ்.எஸ்.ஆர். நடித்த நடிப்பும், வசன உச்சரிப்பும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும். அந்த மருதுபாண்டியர்கள் மறைந்த நாளிலேயே எஸ்.எஸ்.ஆர். இயற்கை எய்தி உள்ளார். அவர் மண்ணில் இருந்து மறைந்தாலும், அண்ணாவின் இயக்கத்திலும், வெள்ளித் திரையிலும் அவர் படைத்த சாதனைகள் என்றைக்கும் அவரது புகழ் பாடும்!
 
அவரை இழந்து துயருறும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.