Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புத்தாண்டு வாழ்த்துக்கள் - வி.கே. சசிகலாவின் முதல் அறிக்கை..


Murugan| Last Modified சனி, 31 டிசம்பர் 2016 (16:23 IST)
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றிருக்கும் வி.கே.சசிகலா அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகு அவர் வெளியிட்டுள்ள முதல் அறிக்கை இதுவாகும்.

 

 
இறைவனின் கொடையாக 2017-ம் ஆண்டு மலர்கின்ற இத்தருணத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புதிய வருடத்தில் தமிழக மக்கள் அனைவருக்கும் கடவுள் எல்லா வளங்களையும், நலன்களையும் நிறைவாக அளித்திட பிரார்த்திக்கிறேன்.
 
நம் அன்புக்குரிய அம்மா அவர்கள் நம்மோடு இல்லையே என்கிற ஆழ்ந்த மன வேதனையோடும், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீதான தங்கள் அன்பு நினைவுகளோடும் இருப்பதை அனைவரும் உணர்கிறோம்.
 
மக்களுக்காக வாழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருந்த மாதரசி நம் அம்மா. ஒவ்வொரு நாளும், ஏதேனும் சில நற்செயல்களை செய்வதற்காகவே அருளப்பட்ட நாளாகக் கருதி, அறம் பல செய்து ஆனந்தம் கொண்டவர் நம் அம்மா. அத்தகைய பேருள்ளம் கொண்ட நம் அம்மா அவர்களின் நல்லாசி என்றைக்கும் நமக்கு உண்டு. அம்மா அவர்கள் காட்டிச் சென்ற வழியில் நம் பயணம் தொடர வேண்டும் என்பதில் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ உறுதியாக உள்ளது.
 
புரட்சித் தலைவி அம்மா அவர்களோடு 33 ஆண்டுகள் நிழலாக வாழ்ந்து வந்த நான், எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ‘கழகப் பொதுச் செயலாளர்’ என்ற பொறுப்பின் வழியாக, தொடர்ந்து அம்மா அவர்களின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றுவேன். அது, இத்தனை ஆண்டுகளாக அம்மா அவர்களுக்கு நான் ஆற்றிய தொண்டின் தொடர்ச்சியாகவே அமைந்திடும்.
 
புலர்கின்ற புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்திட, மீண்டும் ஒரு முறை எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :