செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (08:33 IST)

வாக்காளர்களுக்கு கொலுசு விநியோகம்? திமுக முற்றுகை! – தருமபுரியில் பரபரப்பு!

தருமபுரியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் கொலுசுகள் வழங்குவதாக கூறி திமுகவினர் அதிமுக பிரமுகர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு எழுந்தது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. நேற்று தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி 10வது வார்டில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு விநியோகித்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் அங்கு வந்த திமுக வேட்பாளர் அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக நகர ஜெ.பேரவை செயலாளர் செந்தில் என்பவரது வீட்டில் வைத்து பணம், கொலுசு விநியோகிக்கப்படுவதாக கூறி அவரது வீட்டை திமுகவினர் முற்றுகையிட்டுள்ளனர். அங்கு வந்த போலீஸார் செந்தில் வீட்டை சோதனையிட்டு அங்கு கொலுசு, பணம் எதுவும் இல்லை என்று கூறியபின் அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.