1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 15 மார்ச் 2020 (17:36 IST)

கொரோனா வைரஸ் எதிரொலி: பல்கலைக்கழக தேர்வு ஒத்தி வைப்பு

கொரோனா வைரஸ் எதிரொலி: பல்கலைக்கழக தேர்வு ஒத்தி வைப்பு
சீனா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்பட உலகின் 125 நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித உயிர்களை ஆயிரக்கணக்கில் பலிவாங்கி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸை தடுப்பதற்காக உலகின் பல நாடுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
 
கொரோனா வைரசை ஆரம்பித்து வைத்த சீனாவில் கூட தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் ஆனால் இத்தாலி உள்பட ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் இந்தியாவில் சுமார் 100 பேர் வரை வைரஸ் அறிகுறி இருப்பதாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மிக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது 
 
இதன் ஒரு கட்டமாக எல்கேஜி, யூகேஜி மாணவர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு அலுவலகங்கள், மாநில எல்லையிலுள்ள திரையரங்குகள் வணிக வளாகங்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் அடுத்த நடவடிக்கையாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்துக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை என்றும், பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும்,  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தாஸ் என்பவர் அறிவிப்பு செய்துள்ளார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதேபோல் மற்ற பல்கலைக்கழகங்களில் இருந்தும் விடுமுறை மற்றும் தேர்வு ஒத்தி வைப்பு குறித்த அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்