வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 31 ஜனவரி 2015 (18:43 IST)

’அரசியல் சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும்’ - பிரவீன் தொகாடியா

இந்திய அரசியல் சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
 
இந்து ஒற்றுமை மாநாடு திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகே விஸ்வ இந்து பரிஷத்தின் பொன்விழா ஆண்டு நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் பிரவீன் தொகாடியா சிறப்புரை ஆற்றினார்.
 
 
அப்போது பேசிய பிரவீன் தொகாடியா, "விஸ்வ இந்து பரிஷத் பொன்விழா ஆண்டை கடந்தாலும் விழாவைக் கொண்டாடவில்லை. அயோத்தியில் ராமர்கோயில் கட்டி முடிக்கும்போதுதான் பொன்விழாவை கொண்டாடுவோம்.
 
முஸ்லிம்கள் 14ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இங்கு இல்லை. 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவர்கள் இல்லை. மெக்காவிலும், மதினாவிலும், ஜெருசலேத்திலும் பள்ளிவாசல்களும், தேவாலயங்களும் இல்லை. உலகெங்கும் இந்துக்கள்தான் இருந்திருக்கின்றனர். ஆனால் இன்றைய நிலை என்ன என்பதை நாம் உணர வேண்டும்.
 
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25இன்படி சொந்த மதத்தை பிரசாரம் செய்ய முழு உரிமை உள்ளது. ஆனால், அதை சிலர் மதமாற்றம் செய்வதற்கான உரிமை என்று கருதி பேசி வருகின்றனர். மத மாற்றத்தை விசுவ இந்து பரிஷத் தொடர்ந்து எதிர்க்கும். நாடாளுமன்றத்தில் மதமாற்றத்தை தடை செய்யும் வகையிலான சட்டத்தை அரசு நிறைவேற்றிட வேண்டும்.
 
இன்றைய நிலையில் உலகில் செல்வசெழிப்பு, வளம், கல்வி என எல்லாவற்றிலும் உயர்ந்திருக்கும் நாடாகக் கூறப்படுவது அமெரிக்கா. ஆனால், 1000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாடு அந்தநிலையில் இருந்தது. 500 ஆண்டுகளுக்கு முன்பு உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 35 சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது ஒரு சதவிகிதமாகத்தான் உள்ளது.
 
1947ல் பாகிஸ்தானில் இந்துக்கள் 10 சதவிகிதமாக இருந்தனர். ஆனால் தற்போது இந்துக்கள் ஒரு சதவிகிதம்தான் உள்ளனர். அதுபோல, ஆப்கானிஸ்தானில் 10 சதவிகிதமாக இருந்த இந்துக்களின் சதவிகிதம் 0.1 சதவிகிதமாகத்தான் உள்ளது. 2001இல் 82 சதவிகிதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை தற்போது 79 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.
 
இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்துக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் எனில் நாம், மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும். மதமாற்றம் கூடாது என வலியுறுத்த வேண்டும். தாய் மதத்துக்கு திரும்புதல் பணியை மேற்கொள்ள வேண்டும். பொது சிவில் சட்டத்துக்கு சட்டப்படி ஆதரவு தர வேண்டும்.
 
இந்துக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். இந்திய அரசியல் சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டப்படியான பணிகளை விஸ்வ இந்து பரிஷத் மேற்கொள்ளும்" என்றார்.