வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (07:42 IST)

உடன்குடி அனல்மின் நிலைய புதிய ஒப்பந்தப்புள்ளிக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

உடன்குடி அனல்மின் நிலையம் அமைப்பதற்கான டெண்டர் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில், சதர்ன் சென்ட்ரல் சீனா பவர் எனர்ஜி டிசைனிங் இன்ஸ்டிடியூட் – திரேசே கன்சோர்டியம் என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
 
உடன்குடி அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கேட்டு அறிவிப்பு வெளியிட்டது. இதில், எங்கள் நிறுவனம் கலந்து கொண்டு, குறைந்த தொகையை குறிப்பிட்டு ஒப்பந்தப்புள்ளி தாக்கல் செய்தது.
 
ஆனால், எங்கள் நிறுவனம் கோரிய ஒப்பந்த ஆவணங்களில் குறைபாடு இருப்பதாக கூறி அதனை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிராகரித்தது.
 
எனவே, உடன்குடி அனல் மின்நிலைய திட்டத்துக்கு புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு தடை விதிக்க வேண்டும். எங்கள் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்க மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
 
இந்த வழக்கு விசாரணையின்போது கூடுதல் மனுவை சீன நிறுவனம் தாக்கல் செய்தது. அதில், உடன்குடி அனல் மின்நிலையம் அமைக்க புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
 
இந்த இடைக்கால மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். மேலும், தீர்ப்பு பிறப்பிக்கும் வரை புதிய ஒப்பந்தப்புள்ளியை (டெண்டரை) திறப்பதற்கு தடை விதித்து கடந்த 16 ஆம் தேதி உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், இந்த இடைக்கால மனு மீதான தீர்ப்பை நீதிபதி சத்தியநாராயணன் நேற்று பிறப்பித்தார். அதில், உடன்குடி அனல் மின்நிலையம் அமைக்க 2ஆவது முறையாக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளி மீது நடவடிக்கை எடுக்க தடை விதிப்பதாக கூறியுள்ளார்.