வாடகைக்கு அறை எடுத்து போதை பொருள் தயாரிப்பு – தீ பரவி படுகாயம் அடைந்த இருவர் !
சென்னையில் ஹோட்டல் ஒன்றில் கஞ்சா ஜெல் தயாரிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தீ பரவியதால் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னை அயனம்பாக்கம் மாந்தோப்பு காலனியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரேஸ் ராஜா, விக்னேஷ், மாசி, முகமது ரசாக், ராஜேஷ் ஆகிய 5 பேரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அனைவரும் மது வாங்க செல்ல ரேஸ் ராஜா, விக்னேஷ் ஆகிய இருவர் மட்டும் அறையில் இருந்துள்ளனர்.
அறையில் இருந்த இருவரும் எலக்ட்ரிக் ஸ்டவ் மூலம் கஞ்சா, ஸ்பிரைட் ஆகியவற்றை சூடுபடுத்தி போதை ஜெல் தயாரிக்க முயன்றுள்ளனர். இதனால் அறை எங்கும் புகை பரவியுள்ளது. அந்த நேரம் பார்த்து ராஜா லைட்டரை ஆன் செய்தபோது அறை முழுவதும் எதிர்பாராதவிதமாக தீ பரவியுள்ளது. அந்த தீ அவர்கள் இருவர் மேலும் பரவ அலறிக்கொண்டு இருவரும் அறைக்கு வெளியே வந்து விழுந்துள்ளனர்.
அவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகிகள் தீயை அனைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருவரின் உடலிலும் அதிகப்படியான தீக்காயம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நண்பர்களான மாசி, முகமது ரசாக், ராஜேஷ் ஆகியோர்களை கைது செய்த போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.