வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2018 (17:04 IST)

இந்த பேரை எங்கள் அணிக்கு கொடுங்க - நீதிமன்றத்தில் தினகரன் கோரிக்கை

தனது அணிக்கு மூன்று பெயர்களை பரிந்துரை செய்துள்ள தினகரன், அதில் ஒன்றை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியானவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விடும் என டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார். அதேநேரம் அவர் தனிக்கட்சி தொடங்குகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால், அதை தினகரன மறுத்தார்.
 
“ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றவுடனே புதிய கட்சியை தொடங்கியிருக்க முடியும். ஆனால், எம்.ஜி.ஆரின் உருவாக்கி கட்சி விதிகளின் படி, ஒருவர் புதிய கட்சியை தொடங்கினால், அவரின் அடிப்படை உறுப்பினர் தகுதி இழக்கிறார். எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இது சிக்கலை உருவாக்கும்” என அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில எம்.பிக்கள் கொண்ட தனது அணிக்காகவும், வரும் உள்ளாட்சி மற்றும் மற்ற தேர்தலில் போட்டியிட, தங்கள் அணிக்கு ஒரு பெயரை ஒதுக்க வேண்டும் என அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் இன்று மாலை டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதற்காக டிடிவி தினகரன் தரப்பு மூன்று பெயர்களை நீதிமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளது.
 
எம்ஜிஆர் அம்மா முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் என்ற மூன்று பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரை தனது அணிக்கு ஒதுக்குமாறு தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய கட்சியை இப்போது தொடங்குவதற்கு சாத்தியமில்லை என நீதிமன்றத்தில் கூறிய தினகரன் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், உள்ளாட்சி தேர்தலுக்காக சின்னமும், பெயரும் கேட்கவில்லை. அனைத்து தேர்தலுக்கும் வழங்க வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையம் இடைக்கால ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

அதன்பின் இந்த வழக்கை நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்தது. அப்படி தங்களின் கோரிக்கை நிறைவேறினால், வருகிற 19 அல்லது 24ம் தேதி தனது அணியின் பெயரை தினகரன் அறிவிப்பார் எனத் தெரிகிறது.