வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (10:54 IST)

சிகிச்சை வீடியோ போலி எனில் இன்னும் பல வீடியோக்கள் வரும் : தினகரன் திட்டம் என்ன?

ஜெயலலிதா சிகிச்சை எடுத்த போது இன்னும் சில வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகவும், அவை தகுந்த நேரத்தில் வெளியிட தினகரன் தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நிலவிய சூழ்நிலையில், அவர் படுக்கையில் அமர்ந்து கொண்டு பழச்சாறு அருந்தியவாறு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெற்றிவேல் எம்.எல்.ஏ வெளியிட்டார். அதாவது, ஜெ.வின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை எனக்கூறுவது போலவும், சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த கோபத்தை தகர்க்கும் வகையிலும் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெறுவதற்கு இந்த வீடியோ முக்கிய காரணமாக இருந்தது.
 
ஆனால், அப்போலோ மருத்துவமனையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்குழு ஆய்வு செய்த போது, வெற்றிவேல் வெளியிட்ட வீடியோவில் ஜெ. சிகிச்சை பெறும் அறையில் ஜன்னலுக்கு பின் இருந்த மரம், ஜெ.தங்கியிருந்த அறையில் இல்லை என செய்தி வெளியானது. எனவே, அந்த வீடியோ போலியாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக வெற்றிவேல் மற்றும் தினகரனிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் செய்திகள் வெளியானது.
 
ஜெ.வின் மரணத்திற்கு சசிகலாவும், அவரதும் குடும்பத்தினருமே காரணம் என்கிற எண்ணமே மக்களின் மனதில் நீடிக்க வேண்டும் என கருதியே சிலரே, அந்த வீடியோ போலி என்ற செய்தியை கசியவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தினகரனுக்கு சொல்லப்பட “அது போலி எனில், எங்களிடம் உள்ள இன்னும் சில வீடியோக்கள் வெளியே வரும். அதில், ஜெயலலிதா அவராகவே படுக்கையில் சாய்வது போலவும், சூப் அருந்துவது போலவும் , ஒரு காலின் மீது இன்னொரு காலை போடுவது போலவும் காட்சிகள் உள்ளன”எனக்கூறினாராம்.
 
தங்களுக்கு தெரியாமல் ஜெ. தொடர்பான வீடியோக்களை தினகரன் தரப்பு வெளியிடக்கூடாது என விசாரணை ஆணையம் தடை விதித்திருப்பதால், மற்றொருவர் மூலம் அந்த வீடியோக்கள் வெளியாகும் என தினகரன் கூறியதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.