வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (12:16 IST)

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் குறைப்பு: டிடிவி தினகரன் கண்டனம்..!

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிர்வாகம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட பச்சை நிற பாக்கெட்டுகள் விநியோகம் குறைக்கப்பட்டு அதற்கு மாறாக கொழுப்புச் சத்து குறைந்த ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அதிகளவு விநியோகம் செய்யப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
 
திமுக ஆட்சியில் ஓராண்டில் மட்டும் நான்குமுறை ஆவின் பால் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பதோடு, பண்டிகை நெருங்கும் காலங்களில் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை குறைப்பது மக்கள் மத்தியில் ஆவின் நிர்வாகம் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
பால் திருட்டு, முறைகேடு என ஒட்டுமொத்த ஆவின் நிர்வாகமும் சீர்குலைந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது நிலவும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது பொதுமக்கள் தனியார் நிறுவன பாலை நாடிச் செல்லும் சூழலை உருவாக்கியுள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டுகளை எவ்வித தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதோடு, லாப நோக்கம் பார்க்காமல் பால் உற்பத்தியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக ஆவின் நிர்வாகம் செயல்படுவதை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
 
Edited by Mahendran