மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் டிராபிக் ராமசாமி


வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified வெள்ளி, 29 மே 2015 (17:03 IST)
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கக் கோரினார்.
 
 
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 3 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்துள்ளது. இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.
 
இந்நிலையில், ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர், இந்தத் தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில், இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் டிராபிக் ராமசாமி சந்தித்து பேசினார்.
 
அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஊழல்மிக்க ஆட்சியை ஒழிப்பதற்காகவே ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். எனக்கு இந்த தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். அவர், திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்த பிறகே இந்த இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது முடிவு செய்யப்படும் என்று கூறினார்" என்றார்.
 
மேலும், இதேபோல் திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டவர்களையும் டிராபிக் ராமசாமி விரைவில் சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :