தமிழகத்தில் 60 மாவட்டங்கள் வேண்டும்: சொல்பவர் யார் தெரியுமா?
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மறுவரையறை செய்து மொத்தம் ஆறு 60 மாவட்டங்கள் உள்ள மாநிலமாக மாற்ற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசி, செங்கல்பட்டு ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை விதி எண் 110-ன் கீழ் அறிவித்த நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூறியதாவது
முதலமைச்சரின் புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பெரிய மாவட்டங்களை பிரித்து சிறிய மாவட்டங்களாக உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். தமிழகத்தில் மிக நீண்ட எல்லையை கொண்டது வேலூர் மாவட்டம். வேலூரின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு செல்ல 200 கி.மீ பயணிக்க வேண்டும். மாவட்டத்தின் எந்த எல்லையிலிருந்து வேலூருக்கு செல்வதாக இருந்தாலும் குறைந்தது 100 கி.மீ பயணிக்க வேண்டும். எனவே வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.
இதேபோல் திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகியவை 5000 சதுர கி.மீக்கு அதிகமான பரப்பளவை கொண்ட மாவட்டங்கள் ஆகும். பெரிய மாவட்டங்கள் அதன் வளர்ச்சிக்கு வழி வகுக்காது என்பதால் பெரிய மாவட்டங்களை பிரித்து அதிக சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டமாக பிரிப்பதை விட, பெரிய மாவட்டங்களை ஒரே நேரத்தில் பிரிப்பது தான் சரியாக இருக்கும். அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து பெரிய மாவட்டங்களை மறுவரையறை செய்து 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் வீதம் மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும்”
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்