வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 21 செப்டம்பர் 2014 (13:26 IST)

ஆவின் பாலில் கலப்படம் மற்றும் திருட்டை தடுக்க லாரிகளில் ஜிபிஆர்எஸ் கருவி

ஆவினுக்கு பால் சப்ளை செய்யும் டேங்கர் லாரிகளில் நடைபெறும் பால் திருட்டு மற்றும் கலப்படங்களை தடுக்க, லாரிகளில் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்த, அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
 
ஆவின் பாலை திருடியதாகவும், கலப்படம் செய்ததாகவும் அதிமுகவைச் சேர்ந்த வைத்தியநாதன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து  பால்வளத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில் ரமணா அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர், அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு, இவரது தலைமையில் ஆவின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
 
கூட்டத்தில் ‘‘டிரேக்களில் ஏற்றப்படும் பால் கவர்கள் திருடப்படுவது, பால் கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் பாலை நடு வழியில் திருடுவது, பாலில் தண்ணீர் கலப்பது போன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக தடுக்கப்படவேண்டும்.
 
இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள பால் பதப்படுத்துதல், பாக்கெட்களில் நிரப்புதல், டிரேக்களில் அடுக்கி லாரிகளில் ஏற்றப்படுதல் வரை எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, பால் வினியோகம் மற்றும் பால் ஒன்றியங்களில் இருந்து ஆவின் அலுவலகங்களுக்கு பால் கொண்டு வரும் ஒப்பந்த லாரிகளில் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுப்பது, ஆவின் நிர்வாகத்தால் இயக்கப்படும் லாரிகள் முதல், ஒப்பந்ததாரர்களால் இயக்கப்படும் லாரிகள் வரை எல்லாவற்றிலும் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்துவது மற்றும் ஒவ்வொரு வாகனத்திலும் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
 
இதுதவிர ‘‘பால் கூட்டுறவு ஒன்றியங்களிலிருந்து ஆவினுக்கு பால் சப்ளை செய்ய, ஒப்பந்தம் கோரப்படும் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே, ஒப்பந்தத்தில் பங்கேற்க முடியும் என்றும், ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்படாத வாகன உரிமையாளர்கள் ஒப்பந்தத்தில் பங்கேற்க முடியாது’’ என முடிவு செய்துள்ளதாக ஆவின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.