1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (16:42 IST)

ஆட்சி கலைகிறதா?: தமிழகம் முழுவதும் சிறப்பு போலீசார் தயாராக இருக்க உத்தரவு!

ஆட்சி கலைகிறதா?: தமிழகம் முழுவதும் சிறப்பு போலீசார் தயாராக இருக்க உத்தரவு!

கடந்த சில நாட்களாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் தமிழக அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், சட்டசபையை கலைக்க குடியரசுத் தலைவருடன் அவர் ஆலோசித்ததாகவும் தகவல்கள் வந்தவாறே இருந்தன.


 
 
இந்நிலையில் தமிழகத்தில் எந்த நேரத்திலும் ஆட்சி கலைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு அறிகுறியாக தமிழகத்தில் உள்ள 19 காவல் மாவட்டங்களில் சிறப்பு போலீசார் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் வித்யாசாகரை ஆலோசிக்காமல் அல்லது அவரிடம் தெரிவிக்காமல் எடப்பாடி தரப்பு செயல்பட்டதாக தெரிகிறது. மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்று அது ஆளுநருக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
எனவே, எடப்பாடி பழனிச்சாமி மீது ஆளுநர் வித்யாசகர் கடுமையான கோபத்தில் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கூறிவிட்டுத்தான் இதை செய்தோம் என்ற எடப்பாடியின் விளக்கத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், ஆளுநரிடம் கூற வேண்டாம் என நான் கூறினேனா? என அருண் ஜெட்லியும் கழண்டு கொண்டதாக கூறப்படுகிறது.
 
எனவே, ஜனாதிபதி மூலம் முயன்று பார்க்கலாம் எனக் கருதி, துணை சபாநாயகர் தம்பிதுரையை டெல்லிக்கு அனுப்பியது. ஆனால், ஆளுநரை கேட்காமல் நீங்கள் முடிவெடுத்துள்ளீர்கள். இந்த விவகாரத்தில் ஆளுநரை,  நான் சமாதனப்படுத்த முடியாது என ஜனாதிபதியும் கை விரித்து விட்டதாக கூறப்பட்டது.
 
இந்த சூழலில் இன்று சென்னை வரும் தமிழக ஆளுநர் அதிரடி அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை தமிழக அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்து ஆளுநர் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த சூழலில் தமிழகம் முழுக்க உள்ள 19 காவல் மாவட்ட சிறப்புக் காவல் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆட்சி கலைக்கப்படுகிறதோ என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

ஆனால் பண்டிகை காலம் வருவதால் இது போன்ற உத்தரவுகளை பிறப்பிப்பது வழக்கமான நடைமுறைதான் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.