வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (13:05 IST)

தமிழகத்திற்கு அடுத்த புயல்.. மீண்டும் கனமழை - வானிலை மைய இயக்குனர் தகவல்

கன்னியாகுமரி பகுதியில் வலுப்பெற்றுள்ள ஒக்கி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் கரையைக் கடக்கும் எனவும், அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசசந்திரன் கூறியுள்ளார்.


 
கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள ஒக்கி புயல், அந்த மாவட்டத்தையே உருக்குலைத்து போட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதியில் மரங்கள் வேறோடு சாலையில் சாய்ந்துவிட்டன. மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். மழையில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 5 பேர் பலியாகிவிட்டனர். கடலுக்குள் சென்ற பல மீனவர்களை காணவில்லை.


 
இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
 
கன்னியாகுமரி பகுதியில் உருவாகியுள்ள ஒக்கி புயல் தீவிர புயலாக உருவெடுத்து கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. அது, அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவை நோக்கி நகரும்.
 
அதேபோல், அந்தமான் அருகே நிலவும் வலுவான காற்றாழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை அல்லது கனமழை பெய்யக்கூடும். சென்னைவில் விட்டு விட்டு மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற  வாய்ப்புள்ளது என ஏற்கனவே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.