வாக்காள பெருமக்களே தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. தலைவர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் மே 14-ஆம் தேதி மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
வழக்கமாக தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் கடைசி நாளில் மாலை 5 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த முறை மாலை 6 மணி வரை தேர்தல் பிரச்சாரம் நீட்டிக்கப்பட்டது.
அரசியல் கட்சியினர் இன்று மாலை 6 மணி வரை ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்தனர். மேலும் மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இடைவிடாது மாலை 6 மணி வரை நடைபெறும்.
இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக அல்லது கூட்டம், ஊர்வலம் நடத்தியதாக அல்லது வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் வகையில் ஏதாவது வெளியிட்டால் அவர்கள் மீது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126வது பிரிவின்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்றைய கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, நல்லக்கண்ணு, அன்புமணி ராமதாஸ், சீமான், பிரேமலதா என பல அரசியல் கட்சி தலைவர்கள் மாலை 6 மணி வரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு முடியும் வரை கருத்துக்கணிப்பு வெளியிட ஊடகங்களுக்கு தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். மேலும் தேர்தல், பிரச்சார தொடர்புடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் ஊடகங்களுக்கு தடை விதித்துள்ளது. தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத நடபர்கள் தொகுதியை விட்டு வெளியேறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.