வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (17:13 IST)

திருநெல்வேலியில் 350 கிராமங்களுக்கு குடிநீர் திடீர் நிறுத்தம்

பணியாளர்கள் திடீர் போராட்டம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 350 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.


 


குடிநீர் திட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் குடிநீர் திட்ட உறைகிணறுகள் அமைத்து திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 
இதேபோல திசையன்விளை உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்திற்காக பத்தமடை தாமிரபரணி ஆற்றங்கரையில் நீரேற்றும் நிலையம் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்த நீர் நான்குனேரி, திசையன்விளை மற்றும் அந்தப் பகுதியில் உள்ள 342 கிராம மக்களுக்கான இத்திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்த பகுதியில், ஒப்பந்த அடிப்படையில் 37 பணியாளர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ. 3500 முதல் ரூ.5500 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
 
நீரேற்றும் நிலையத்தில் பணிசெய்து வரும் இந்த பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
 
இந்நிலையில், பணியாளர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த போராட்டம் காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், 350 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 3 மாதம் சம்பளத்தை மொத்தமாக வழங்குவது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.