மாடு, நாய் அடுத்து மனிதர்களா? - புலி வெறியாட்டாத்தால் பொதுமக்கள் அச்சம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: ஞாயிறு, 8 ஜனவரி 2017 (12:59 IST)
நெல்லை அருகே தேயிலை தோட்டத்தில் காவலுக்கு கட்டியிருந்த நாயை புலி ஒன்று அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக, கேரள எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் புளியரை வனப்பகுதியிலும், குண்டாறு வனப்பகுதியிலும் சிறுத்தைகள், புலி உள்ளிட்ட மிருகங்களின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக குண்டாறு பகுதியில், நடமாடும் சில புலிகள் தொழுவத்தில் கட்டியிருந்த மாட்டை அடித்து கொன்றது. சில தனியார் தோட்டங்களில் கட்டிப் போட்டிருந்த நாய்களை கொண்டு தூக்கி செல்லும் நிகழ்வுகளும், மாட்டை கொன்று திங்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

மேலும் தென்மலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எக்கோ டூரிசம் சூழல் பார்க் அருகே கடந்த சில நாட்களாக சிறுத்தை மற்றும் புலி நடமாட்டம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் இரண்டு நாய்களை புலி தூக்கி சென்றது.

மேலும் ராஜன் என்பவர் தனது தோட்டத்தில் காவலுக்காக வளர்த்து வந்த ஒரு நாயை புலி அடித்து கொன்று விட்டு தப்பிச் சென்றது.  இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு வந்து காட்டுப்பகுதிக்குள் சென்று தேடிப்பார்த்தனர்.

இந்நிலையில் தப்பி சென்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாடுகள், நாய்களைத் தொடர்ந்து மனிதர்களையும் புலிகள் கொன்றுவிட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :