1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 7 டிசம்பர் 2016 (16:44 IST)

துரதிர்ஷ்டம்: பதவி இருந்தும் வாரிசு இன்றி இறந்த மூன்று முதலமைச்சர்கள்

அறிஞர் சி.என்.அண்ணாதுரை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா ஆகிய மூவருக்கும் வாரிசுகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


 

பெரியாரிடம் இருந்து பிரிந்த சி.என்.அண்ணாதுரை அவர்கள், 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை தொடங்கினார். 192ஆம் ஆண்டு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் 1967ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை சென்னை மாநில முதலமைச்சராக பணியாற்றினார். முதலமைச்சராக பதவியில் இருக்கும்போதே புற்றுநோய் தாக்குதலால் 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மரணமடைந்தார்.

அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார். இவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது. அண்ணா தனது அக்காள் மகள் சௌந்தரி யின் பிள்ளை களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகியோரை வளர்ப்பு மகன்களாக்கிக் கொண்டார். ஆனாலும் சொந்த வாரிசுகள் என்று யாருமில்லை.

திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் திமுகவில் இருந்து பிரிந்து, 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார்.

அதன் பிறகு 1977, 1980 மற்றும் 1984 ஆகிய மூன்று முறை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிப்பெற்று தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்தார். 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார்.

எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர் சதானந்தவதி என்பவரை மணந்தார். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார்.

அதன் பின்னர், தியாகராஜ பாகவதர் தயாரித்த இராஜமுக்தி படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, அப்படத்தில் நடித்த வைக்கம் நாராயணி ஜானகி மீது ஈர்ப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை மணந்தார். ஆனால், அவர்களுக்கும் வாரிசுகள் இல்லை.

அவரைத் தொடர்ந்து அதிமுகவை வழிநடத்திய ஜெயலலிதா 1991-1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும், பிறகு 2011 முதல் அவர் இறக்கும் வரையிலும் முதல் அமைச்சராக பதவி வகித்தார். இடையில் இரண்டு முறை சொத்துக்குவிப்பு வழக்கினால் முதலமைச்சர் பதவியில் தகுதி இழந்திருந்தார்.

ஆனாலும், ஆட்சியில் இருக்கும் போதே மரணமடையும் மூன்றாவது முதலமைச்சர் ஜெயலலிதா என்று புகழ் அவருக்கு கிடைத்தாலும், துரதிர்ஷ்டவசாமாக அவருக்கும் வாரிசுகள் கிடையாது என்பது துரதிர்ஷ்டம்தான்.