1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 28 ஜனவரி 2015 (09:12 IST)

ஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்தது எப்படி என்று நடித்துக் காட்டிய திருடன்

துரைப்பாக்கத்தில் கத்திமுனையில் ஆசிரியையிடம் சங்கிலி பறித்தது எப்படி என்று திருடன் நீராவி முருகன் பொதுமக்கள் மத்தியில் நடித்துக் காட்டினார், அங்கு நின்ற பள்ளி ஆசிரியையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
 
சென்னையை அடுத்துள்ள துரைப்பாக்கத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் செந்தில் என்பவரது மனைவி 27 வயதுடைய வேலம். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.
 
இந்நிரையில், கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி, மாலையில் வேலை முடிந்த வேலம், ஸ்கூட்டியில் வீட்டுக்கும் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்த 2 பேர்களில் ஒருவர், ஆசிரியை வேலத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, 14 பவுன் சங்கிலி, செல்போன் ஆகியவற்றை பறித்தார்.
 
பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இந்த கொள்ளைச்சம்பவ காட்சிகள் வலைத்தளத்தில் பரவியதை தொடர்ந்து கொள்ளையனை பிடிக்க, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
 
இதைத் தொடர்ந்து, அவர்கள் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவன் தூத்துக்குடியைச் சேர்ந்த 32 வயதுடைய நீராவி முருகன் என்பதும் உடன் சென்றது அவனது கூட்டாளி ஹரிகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது.
 
கடந்த மாதம் 26 ஆம் தேதி ஹரிகிருஷ்ணன் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நீராவி முருகன் ஏற்கனவே கொலை, கொள்ளை ஆகிய வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
 
இந்த நீராவி முருகன் தூத்துக்குடி மாவட்டம் புதியம் புத்தூர் அருகே உள்ள நீராவி கிராமத்தை சேர்ந்தவர். 10 வயதிலிருந்தே குற்றசெயல்களில் ஈடுபட்ட அவர் மீது, தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
 
கடந்த 2008 ஆம் ஆண்டு பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படையில் சேர்ந்து பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நீராவி முருகன் மீது திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கொலை வழக்குகள் உள்ளன.
 
இந்நிலையில், சென்னை வடபழனியில் தங்கி, தனியாகச் செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகளிலும் நகைபரிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
 
இதேபோல, துரைப்பாக்கத்தில் பள்ளி ஆசிரியையிடம் வழிப்பறி செய்தபோது அருகில் உள்ள வீட்டில் இருந்த ஒருவர் எடுத்த வீடியோ படம் வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர், இந்நிலையில், நீராவி முருகன் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தனிப்படை காவல்துறையினர் அங்கு முகாமிட்டு அவரை துப்பாக்கி முனையில் கைதுசெய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.
 
சென்னை துரைப்பாக்கம் எம்.சி.என்.நகரில் பள்ளி ஆசிரியையிடம் வழிப்பறி செய்தது எப்படி? என்று நீராவி முருகன் நேற்று மாலை காவல்துறையினர் முன்னிலையில் பொதுமக்களிடம் நடித்துக் காட்டினார். அப்போது பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியை வேலம் அங்கு நின்றிருந்தார்.
 
அப்போது, ஆசிரியை வேலத்தை பார்த்ததும், கூடி நின்ற பொதுமக்கள் மத்தியில் நீராவி முருகன் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.