1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 30 ஜூலை 2015 (16:15 IST)

யாகூப் மேமன் தூக்கு: இந்த நாட்டில் நீதியின் பெயரால் இனி ஓரு உயிரைப் பறிப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது - தொல்.திருமா

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் மன சாட்சியையே உலுக்கும் வகையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அதுவும் அவரது பிறந்த நாளில், மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திவந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அடக்கம் செய்யும் நாளில் நீதியின் பெயரால் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 
மரண தண்டனையை முற்றாக ஒழிப்பதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து குரலெழுப்ப வேண்டுமென வலியுறுத்துகிறோம். யாகூப் மேமனின் விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததை விசாரணை அதிகாரிகளும் அவரை சரணடையச் செய்த காலஞ்சென்ற ‘ரா’ உளவுப் பிரிவு அதிகாரி பி.இராமனும் பல்வேறு சட்ட வல்லுநர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
 
ஒருவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அதிலிருந்து 7 நாட்களுக்குப் பிறகுதான் அவரைத் தூக்கிலிட வேண்டுமென மகாராஷ்டிர மாநில சிறைவிதிகள் கூறுகின்றன. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் 14 நாட்களுக்குப் பின்னர்தான் தூக்கிலிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
 
இவற்றையெல்லாம் எடுத்துக்கூறி வழக்கறிஞர்கள் வாதிட்டும்கூட உச்சநீதிமன்றம் அதை ஏற்காமல் யாகூப் மேமனைத் தூக்கில் போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உடன்போயிருக்கிறது. இது நீதியின்பால் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது.
 
டெல்லி தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த பாஜக தற்போது பீகார் மாநிலத் தேர்தலை எதிர் கொண்டிருக்கிறது. அங்கு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் நிதீஷ்குமாருக்குத்தான் பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவித்துள்ளன. இந்நிலையில் மதவெறியைத் தூண்டி எப்படியாவது பீகாரில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
 
உலகில் 140 நாடுகளில் மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளும் மரண தண்டனையைக் கைவிட வேண்டும் என ஐ.நா. மன்றம் வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவும் மரண தண்டனையை முற்றாகக் கைவிட வேண்டும். இந்த நாட்டில் நீதியின் பெயரால் இனி ஓர் உயிரைப் பறிப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.
 
எனவே, மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைந்து குரலெழுப்புமாறு மனசாட்சியுள்ளவர்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.