வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 28 டிசம்பர் 2016 (05:47 IST)

ராம மோகன் ராவுக்கு ஆதரவளிக்கும் திருநாவுக்கரசர்!

ஜெயலலிதா இருந்திருந்தால் அவருக்கு தகவல் தெரிவிக்காமல் தலைமைச் செயலகத்திற்குள் சோதனை நடந்திருக்குமா என்பது சந்தேகமே என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.


 

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ், அவரது மகன் விவேக் மற்றும் உறவினர் வீடு உட்பட 13 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அதில், 5 கிலோ தங்கம், 30 லட்ச ரூபாய்புதிய நோட்டுகள், பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு இருந்து ராமமோகன் ராவ் டிஸ்சார்ஜ் ஆனார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ”கடந்த 7 மாதங்களாக நிர்வாக ரீதியாக எந்த தவறும் இல்லை. ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரிலேயே 7 மாதங்கள் செயல்பட்டுள்ளேன்.

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் யாரும் உள்ளே நுழைந்திருக்க முடியாது. ஜெயலலிதா தலைமையின் கீழ் நான் பல ஆண்டுகள் பயிற்சி எடுத்துள்ளேன். 32 ஆண்டு பணியாற்றிய அரசு அதிகாரியை இப்படியா நடத்துவது?” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறிய அவர், ”முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் தவறில்லை.

ஜெயலலிதா இருந்திருந்தால் அவருக்கு தகவல் தெரிவிக்காமல் தலைமைச் செயலகத்திற்குள் சோதனை நடந்திருக்குமா என்பது சந்தேகமே. ஜெயலலிதா  மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் நடப்பது மர்மமாகவே இருக்கிறது” என்றார்.