1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 24 ஜூலை 2014 (16:48 IST)

சட்டசபையில் ஆளும் கட்சியினரே கேள்வி கேட்டு அவர்களே பதில் சொல்கிறார்கள் - தொல்.திருமாவளவன்

எதிர்க் கட்சிகளே இல்லாமல் சட்டசபை நடத்தப்படுகிறது. ஆளும் கட்சியினரே கேள்வி கேட்டு பதில் சொல்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், போர்க் களத்தில் எதிரிகளே இல்லாமல் சண்டை போடுவது போல் இருக்கிறது. ஜனநாயகம் கேலிக் கூத்தாகி வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
 
தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், நெல்லை மோகன் ஆகியோரது நினைவேந்தல் பொதுக்கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெல்லை டவுன் வாகையடி முனையில் நேற்று இரவு நடந்தது.
 
இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
 
தர்மபுரி மாவட்டத்தில் 3 கிராமங்கள் சூறையாடப்பட்டன. நமது இயக்கத்தை சேர்ந்த மோகன் மேலப்பாளையத்தில் படுகொலை செய்யப்பட்டார். காஞ்சீபுரத்தில் நமது கட்சி கொடிகள் சேதப்படுத்தப்பட்டன. இதுபோன்று பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் சட்டசபையில் சட்டம்- ஒழுங்கு சீராக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
 
எதிர்க்கட்சிகளை பேசவிடுவது இல்லை. மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசினால், அனுமதி மறுக்கப்படுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை தொடர்ந்து அவையை விட்டு வெளியேற்றி வருகிறார்கள்.
 
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு எந்த அரசு பதில் சொல்கிறதோ அந்த அரசுதான் நெஞ்சுரம் வாய்ந்த அரசாக கருதப்படுகிறது. ஆனால் நடப்பது என்ன? எதிர்க் கட்சிகளே இல்லாமல் சட்டசபை நடத்தப்படுகிறது. ஆளும் கட்சியினரே கேள்வி கேட்டு பதில் சொல்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், போர்க் களத்தில் எதிரிகளே இல்லாமல் சண்டை போடுவது போல் இருக்கிறது. ஜனநாயகம் கேலிக் கூத்தாகி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கொடுத்து, அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.
 
வெற்றி- தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 2 இடங்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதற்காக நாம் சோர்ந்து போகக்கூடாது. நம்முடைய பயணம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அல்ல? ஒடுக்கப்பட்ட மற்றும் சமுதாயத்தின் பின்தங்கிய மக்களின் விடுதலையை நோக்கி இருக்க வேண்டும். வருகிற ஆகஸ்டு 17 ஆம் தேதி தமிழர்களின் எழுச்சி நாளாக சேலத்தில் கல்வி உரிமை மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்துகிறோம். அனைவருக்கும் இலவசமாக கல்வி கொடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை அரசு நடத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை தனியார் நடத்த வேண்டும். ஆனால் இந்த அரசு நேர்மாறாக நடத்துகிறது. அரசே கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமைக்க வேண்டும். நீங்கள் அனைவரும் மாநாட்டுக்கு வரவேண்டும் என்று தொல்.திருமாவளவன் பேசினார்.