நாம் திருந்த வேண்டும்; திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் விட்டார்கள் - கருணாநிதி
இனி மேலாவது நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் திமுகவை அழிக்கலாம் என்று நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போய் விட்டார்கள் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ”நான் உங்களுக்கெல்லாம் இப்போது அறிவுரை எதுவும் கூறப் போவதில்லை. ஏனென்றால் உங்களுக்கெல்லாம் இனிமேல் அறிவுரை எதுவும் சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்.
ஏனென்றால் பெற வேண்டிய அறிவுரைகளையெல்லாம் இங்கே வீற்றிருக்கின்ற செயற்குழு, சட்டப்பேரவைக்கு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள். இனி மேலாவது நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நம்மை நாமே திருத்திக்கொண்டு இடையிலே நுழைந்த துரோகச் செயல்களுக்கு இடம் தராமல், தூய்மையாக திமுகவை நடத்திச் சென்று, அடுத்தடுத்த வெற்றிகளைப் பெறுவதற்கு நாம் முனைய வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தோற்காது; தோற்கப் போவதுமில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்கலாம் என்று நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போய் விட்டார்கள். இதற்கு முன்பே இந்தக் கட்சிகள் தலை தூக்கி ஆடிய காட்சிகளையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். அந்தக் காட்சிகள் எல்லாம் மாயமாய் மறைந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம்.
எனவே அந்த நம்பிக்கையோடு இப்படிப்பட்ட முடிவுகளைத் தந்த தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தலை நடத்திய அதிகாரிகள், அரசு இவர்களுக்கெல்லாம் பாடம் போதிக்கும் வகையிலே ஏற்பட்டுள்ள இந்த நிலையை எண்ணிப் பார்த்து அடுத்து நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் பலமான அடியாக - யாருக்கும் பயப்படாத அடியாக - துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக - எடுத்து வைக்க இந்தச் செயற் குழுவில் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.