பெண்களை பெருமைப்படுத்தி கொண்டாடுவதாகச் சொல்கிறது உலகம்.ஆனால் யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா?- நடிகை சோனா ஹைடன்
புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, -பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொடுமை தீராத வேதனையை தருகிறது.
ஒரு பெண்ணாக இருப்பதென்றால் என்னவென்று கூட அறியாத வயதுள்ள குழந்தையை இப்படி சிதைத்திருப்பது, நாம் நாகரிக சமூகத்தில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியை தருகிறது.
இந்த அவமானகரமான சம்பவம் நம்முடன் மிருகங்களும் வசிப்பதையே காட்டுகின்றன.
நான் நடிகை, திரைபிரபலம் என்றாலும் நானும் என் சக ஊழியர்களும் கூட இதுபோன்ற காட்டுமிராண்டித்தன நிகழ்வுகளை எதிர்கொண்டு மீண்டிருக்கிறோம் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
இதுபோன்ற மிருகங்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பெண்களான நாங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். அது தீராத, முடிவடையாத ஓட்டமாகவே இருக்கிறது.
வளர்ந்த சமூகத்திலும் பெண்கள் அடக்கப்படுவதும், இழிவுபடுத்தப்படுவதும் தவறான முத்திரை குத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஏன் என்கிற கேள்விக்கு எங்கும் பதிலில்லை.
இன்னும் எவ்வளவு காலம் மவுனம் காக்கப் போகிறோம்? நாம் குரல் கொடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு பேரச்சம் ஏற்படும் வகையில் பெருங்குரலாக அது இருக்க வேண்டும்.
புதுச்சேரியில் நடந்த அக்கொடுமையை வன்மையாகக் கண்டிப்பதுடன் பெண்களை கொண்டாடும் இந்நாளில் எனது ஆழ்ந்த இரங்கலை அந்தச் சிறுமியின் குடும்பத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பிஞ்சு நெஞ்சின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்