வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 23 மே 2015 (12:11 IST)

இரசாயன உரங்கள் விற்பனையில் முறைகேடு - தமிழக அரசு விசாரணை நடத்த வைகோ கோரிக்கை

இரசாயன உரங்கள் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதால், இது குறித்து, தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 

ரசாயன உரங்கள் விலையேற்றம் மற்றும் உரம் தட்டுப்பாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர்.

விவசாயிகளின் உரத்தேவையை கருத்தில் கொண்டு, இந்திய கூட்டுறவு நிறுவனமான கிரிசாக் பாரதி கோ-ஆப்ரட்டிவ் லிமிடெட் (கிரிப்கோ) மூலம் ஓமன் நாட்டிலிருந்து யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது. ஓமனிலிருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு மொத்தமாக வந்து சேரும் யூரியா, பின்னர் 50 கிலோ மூட்டைகளாக தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமன் நாட்டிலிருந்து 42 ஆயிரத்து 360 டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வந்தடைந்தது. தமிழ்நாடு கோ-ஆப்ரேட்டிவ் மார்க்கெட்டிங் பெடரேஷன் (டான்ஃபீடு) மூலம் கிடங்குகளில் 50 கிலோ மூட்டைகளாக மாற்றப்பட்டு, அங்கிருந்து 80 விழுக்காடு மூட்டைகள் தமிழ்நாடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கும், 20 விழுக்காடு மூட்டைகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் உர விற்பனை மையங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. கிரிப்கோ யூரியா 50 கிலோ எடையுள்ள மூட்டை ஒன்று 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உர விற்பனை மையங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் கிரிப்கோ யூரியா 50 கிலோ மூட்டைகள், சராசரியாக இரண்டு முதல் மூன்று கிலோ வரை எடை அளவு குறைந்து  இருப்பதால், விலை கொடுத்து வாங்கிய விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் 17 தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் 36 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு மையங்களில் நேரடி ஆய்வு நடத்தி, எடை அளவு குறைந்த சுமார் 360 டன் கிரிப்கோ யூரியா மூட்டைகள் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளனர்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் எடை அளவு குறைந்த கிரிப்கோ உர மூட்டைகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்தின் கிடங்குகளில் 50 கிலோ மூட்டைகளாக சிப்பம் போடும்போது முறைகேடுகள் நடந்துள்ளன.

தமிழக அரசு யூரியா விற்பனையில் நடந்துவரும் முறைகேடுகள் பற்றி உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, சரியான எடை அளவில் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.