வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (12:09 IST)

லிப்ட் கேட்டு ஏறிச்சென்ற,மினிடெம்போவையே திருடிச்சென்ற நபர் கைது.....

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள கோணபைப் பேருந்து நிறுத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (49), டிரைவரான இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ ( தோஸ்த்) வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று  விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, எடப்பாடி அருகே உள்ள ஒரு கோவிலுக்கு ராஜமாணிக்கம் தனது ஆட்டோவில் அரிசி மற்றும் குடிநீர் கேன்களை ஏற்றிச் செல்ல வாடகைக்கு சென்றுள்ளார்.
 
அப்போது எடப்பாடி பேருந்து நிலையம் அருகே அவர் சென்ற ஆட்டோவை கைகாட்டி நிறுத்திய நபர் ஒருவர் தான் ரிக் வண்டியில் வேலை செய்வதாகவும், தனது முதலாளி சம்பளம் கொடுக்காததால் சாப்பிடாமல் பசியில் இருப்பதாகவும், தான் பள்ளி பாளையத்திற்க்கு செல்ல வேண்டும்  நீங்கள் செல்லும் வழியில் என்னை இறக்கி விட்டால் உங்களுக்கு புண்ணியமாக இருக்கும் என்று கெஞ்சி உள்ளார்.
 
அந்த நபரின்  பரிதாப நிலையை பார்த்த ராஜமாணிக்கம், தான் செல்லும் வழியில் இறக்கி விடுவதாக கூறி அவரை தனது லோடு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
 
அப்போது செல்லும் வழியில் எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் உள்ள அரிசி கடை முன் ஆட்டோவை நிறுத்தி அரிசி மூட்டைகளை ஏற்றியுள்ளார்.
 
அப்போது லிப்ட் கேட்டு வந்த நபர் ஆர்வத்துடன் உதவி செய்துள்ளார். அரிசி மூட்டைகளை ஏற்றிய ராஜமாணிக்கம் அருகில் இருந்த கடைக்கு சென்று குடி தண்ணீர் கேன்னை எடுத்துக்கொண்டு திரும்பிய நிலையில், அரிசி கடை முன் நிறுத்தி இருந்த ஆட்டோவை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். 
 
அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, உங்கள் டிரைவர் ஆட்டோவை ஓட்டிச் சென்று விட்டார் எனக்கூறியுள்ளனர்.  பல்வேறு இடங்களில் தேடியும் ஆட்டோ கிடைக்காத நிலையில், ராஜமாணிக்கம் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் ஞாயிறு அன்று ராஜமாணிக்கத்தின் கைபேசி எண்ணிற்கு ஒரு  அழைப்பு வந்துள்ளது அதில் பேசிய நபர் "சார் ஆட்டோ வாடகைக்கு வருமா" என கேட்டுள்ளார். 
 
நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று ராஜமாணிக்கம் கேட்டதற்கு, "சார் நான் மகுடஞ்சாவடி அருகே இருந்து பேசுகிறேன், உங்க ஆட்டோவின் பக்கவாட்டில்  வாடகைக்கு தொடர்பு கொள்ளவும் " என்று எழுதி இருந்த கைப்பேசி எண்ணை பார்த்து அழைத்ததாக கூறியுள்ளார்.
 
இதுகுறித்து ராஜமாணிக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜமாணிக்கத்திடம் இருந்து திருடி சென்ற ஆட்டோவில், மது போதையில் படுத்து இருந்த இளைஞரை பிடித்து அவர் திருடி சென்ற ஆட்டோவை மீட்டனர்.  தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
விசாரணையில் மகுடஞ்சாவடியை சேர்ந்த அஜித் குமார் 29 என்பது தெரிய வந்தது அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.