வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 28 மே 2015 (02:51 IST)

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு - அன்புமணி

மாணவர்களுக்கு நிபந்தனையின்றி வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதுதான் நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
 
இது குறித்து பாமக இளைஞரணி தலைவரும், எம்பிமான அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற வேண்டும். கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதால்தான் கல்விக்கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
 
ஆனால், ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புக்கள் கிடைத்தாலும், அதற்குத் தேவையான கல்விக்கடன் மட்டும் எட்டாத கனியாக உள்ளது. 
 
தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு  வாய்மொழி உத்தரவு உள்ளதாக தெரியவருகிறது. இது வேதனை அளிக்கும் செயலாகும்.  
 
மாணவர்கள் வேலை கிடைக்க நல்ல வாய்புள்ள படிப்பில் சேர வேண்டுமானால் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தான் ஒரே வழியாகும். தனியார் கல்லூரிகளில் அதிக பணம் கட்டி படிப்பவர்களை எல்லாம், பணக்கார மாணவர்கள் என்று கருதக்கூடாது. 
 
இவர்களில் பலர் குடியிருக்கும் வீட்டையும், வாழ்வாதாரம் அளிக்கும் நிலங்களையும் விற்று நன்கொடை செலுத்தியவர்கள் என்பதையும், அதற்குப் பிறகு கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் தான் கல்விக்கடன் கேட்டு வங்கிகளை அணுகுகிறார்கள் என்பதை அதிகாரிகள் மனதார உணரந்து கொண்டு அதன் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும். 
 
கல்விக்கடன் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் 1.20 கோடி பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 9.56 லட்சம் பேருக்கு மட்டுமே பொதுத்துறை வங்கிகள் கல்விக்கடன் வழங்கியுள்ளன. 
 
பெரு நிறுவனங்களுக்கு தடையின்றி கடன் வழங்கும் வங்கிகள், மாணவர்களுக்கு கல்விக்கடனாக சில லட்சங்களை வழங்க தயங்கிவருகிறது. வங்கிகள் இவ்வாறு தயங்குவது நீதியல்ல.  மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது  நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு ஆகும்.
 
எனவே, தற்போது கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நிபந்தனையின்றி வங்கிகள் கல்விக்கடன் வழங்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.