செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (17:28 IST)

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது- அன்புமணி ராமதாஸ்

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது: எருமைப்பாலுக்கு ரூ. 51, பசும்பாலுக்கு ரூ.42 வீதம் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்! என்று பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும் பாலுக்கான விலை லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து 38 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கான விலை 44 ரூபாயிலிருந்து, 47 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள லிட்டருக்கு ரூ.3 விலை உயர்வு யானைப்பசிக்கு சோளப்பொறியைப் போன்றது. இது போதுமானதல்ல. ஆவின் பால் கொள்முதல் விலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர்த்தப்பட்ட போதே அது போதுமானதல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறியது. ஆனால், அதை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாகத் தான் அதன் பின்னர் ஆவின் நிறுவனம் ஒவ்வொரு நாளும் கொள்முதல் செய்யும் பாலின் அளவு 10 லட்சம் லிட்டர் குறைந்தது. இப்போதும் பால் கொள்முதல் விலை நியாயமான அளவுக்கு உயர்த்தப்படவில்லை என்றால் ஆவின் பால் கொள்முதல் மேலும், மேலும் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது. இது ஆவின் நிறுவனத்தின் வீழ்ச்சிக்குத் தான் வழி வகுக்கும். ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என கடந்த நான்கு ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்கள் கோரி வருகின்றனர். கால்நடைத் தீவனங்களின் இன்றைய விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பால் கொள்முதல் விலை குறைந்தது லிட்டருக்கு ரூ.13 வழங்கப்பட வேண்டும்.

ஆனால், கடந்த ஆண்டு ரூ.3, இப்போது ரூ.3 என மொத்தம் ரூ.6 மட்டுமே உயர்த்தப்பட்டிருகிறது. இது போதுமானதல்ல. கால்நடைத் தீவனங்களின் விலை உயர்வுக்கு இணையாக பால் கொள்முதல் விலையை உயர்த்த முடியவில்லை என்றாலும் கூட, கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தியாளர்கள் கோரிய அளவிற்காவது உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும். ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 51, பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42 வீதம் விலையை உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.