தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோவிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தேர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் தேர் நகர்வலம் முடிந்து கோவிலை நெருங்கியபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் தேரினுள் நின்ற 10 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதால் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை தேர் விபத்து குறித்து தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக திருவையாறு எம்.எல்.ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற விபத்துகள் தொடராமல் இருக்க தேர் ஊர்வலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டிடிவி தினகரன்:
களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் உடல் நலம் பெற்றிட பிராத்திக்கிறேன்.
இவ்விபத்தில் பலியானோருக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது, உரிய முறையில் விசாரித்து விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இனிவரும் காலங்களில் மக்கள் பெருமளவில் கூடும் திருவிழாக்களில் மிகுந்த கவனத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை:
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். தேர் விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.
எடப்பாடி பழனிச்சாமி:
களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில், வீடு திரும்ப வேண்டுகிறேன். மரணமடைந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் , காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்:
அப்பர் கோயில் தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் மனவேதனை அளிக்கிறது; அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணாமலை:
தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன். இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.
சசிகலா:
தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியடையவைக்கிறது. இதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.இதில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.இது போன்ற திருவிழாக்களின்போது சம்மந்தபட்ட அரசு அதிகாரிகள் உரிய பாதுகாப்பை அளித்திடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.