1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (16:39 IST)

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டு போக தயார்: தனியரசு ஆவேசம்!

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டு போக தயார்: தனியரசு ஆவேசம்!

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவளிக்க நான் பணம் வாங்கியதை நிரூபித்தால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவும், அரசியலை விட்டு விலகவும் தயாராக உள்ளதாக காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனியரசு கூறியுள்ளார்.


 
 
கடந்த 12-ஆம் தேதி டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணனின் வீடியோ ஒன்றை வெளியிட்டு தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவளிக்க எம்எல்ஏக்களுக்கு 6 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக கூறியிருந்தார்.
 
குறிப்பாக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு 10 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் சட்டசபையில் அமளியை கிளப்பியது.
 
இதனையடுத்து தனியரசு எம்எல்ஏ இந்த பேர விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சியை சீர்குலைக்க டைம்ஸ் நவ் தொலைக்காட்சி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
 
மேலும் தான் யாரிடமும் இதுவரை லஞ்சம் பெறாமல் தனது மக்கள் பணியை செய்துவருவதாக கூறிய அவர், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவளிக்க பணம் வாங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்தால், தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யதுவிட்டு அரசியலை விட்டு விலகவும் தயார் என்றார்.