தினகரன் மீதான அமைச்சர்களின் சீற்றத்துக்கு இவரும் ஒரு காரணம்!

தினகரன் மீதான அமைச்சர்களின் சீற்றத்துக்கு இவரும் ஒரு காரணம்!


Caston| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (10:50 IST)
சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன். அன்று முதல் தினகரன் புகழ் பாடிவந்த அதிமுக அமைச்சர்கள் தற்போது அவரை முற்றிலுமாக கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறியுள்ளனர்.

 
 
தினகரன் மீது அமைச்சர்கள் இப்படி ஒரு திடீர் முடிவு எடுக்க காரணம் பல கூறப்பட்டாலும், தினகரன் கூடவே இருந்த முன்னாள் அமைச்சரும் தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
 
ஜெயலலிதா இருக்கும் போது தளவாய் சுந்தரம் ஓரம்கட்டுப்பட்டே வைக்கப்படிருந்தார். ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் டிடிவி தினகரனுடன் வலம் வந்த தளவாய் சுந்தரம் தினகரனுக்கு ஆல் இன் ஆலாக மாறினார். பல்வேறு விவகாரங்களை கையாள தினகரன் தளவாய் சுந்தரத்தை நியமித்தார்.
 
தன்னை தினகரனுக்கு அடுத்த கட்டத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்ட தளவாய் சுந்தரம் அமைச்சர்கள் யாரையும் மதிக்காமல் நடந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு விவகாரங்களில் அமைச்சர்களுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வந்த தளவாய் சுந்தரம் தேவையில்லாத விவகாரங்களில் முக்கை நுழைப்பதாக அமைச்சர்களால் முனுமுனுக்கப்பட்டது.
 
மேலும் ஆர்கே நகர் தேர்தலின் போது தளவாய் சுந்தரம் ஓவராக ஆட்டம் போட்டதாகவும், அமைச்சர்கள் சிலரை பற்றி தினகரனிடம் போட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் அவரை ராஜினாமா செய்ய அமைச்சர்கள் சிலர் கூறியதாகவும், அதற்கும் தளவாய் சுந்தரம் ஒரு மூத்த அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களும் தினகரன் மீதான அமைச்சர்களின் சீற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :