1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (07:59 IST)

முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தரவில்லை: மாநில இணைச் செயலாளர் விலகல்

மது ஒழிப்பை வலியுறுத்தி இன்று நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தர மறுத்ததால், அந்த அமைப்பின் மாநில இணைச்செயலாளர் பூவை கந்தன் விலகியுள்ளார்.
 
இது குறித்து பூவை கந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–
 
மது ஒழிப்பு போராளி சசி பெருமாள், மதுவின் கொடுமையில் இருந்து தமிழகத்தை விடுவிக்க தன் வாழ்நாளெல்லாம் போராடியதோடு அந்த நோக்கத்துக்காக உயிர்த்தியாகமும் செய்துள்ளார்.
 
முழு மதுவிலக்கை தமிழகத்தில் ஏற்படுத்த சசி பெருமாள் முன்வைத்த கோரிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்திட  ஆகஸ்டு 4 ஆம் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை நடத்திட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
 
இந்த போராட்டத்துக்கு அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தனது அமைப்பு ஆதரவு தெரிவிக்காது என்று அறிவித்துள்ளார்.
 
ஒட்டுமொத்த மக்களின் உணர்வுக்கு எதிராக விக்கிரமராஜாவின் அறிவிப்பு இருக்கிறது. இதனால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் பூவை கந்தன்  கூறியுள்ளார்.

மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை முழு அடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து அழைப்பு விடுத்தன. இதைத் தொடர்ந்து, பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்டவை ஆதரவு கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.