தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified ஞாயிறு, 20 ஏப்ரல் 2014 (13:12 IST)
தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் மதுவிற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. சித்திரை 1 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது.
வரும் 22 ஆம் தேதி முதல் 3 நாட்கள் டாஸ்மார்க் கடைகள் மற்றும் ஹோட்டல் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் திருவிழா காலங்களில் விற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களில் ரூ.57 கோடி முதல் ரூ.60 கோடி வரை மது விற்பனை ஆகும். அதுவே சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரூ.70 கோடி முதல் ரூ.90 கோடி வரை விற்பனையாகி வருகிறது.
 
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல், சித்திரை 1 போன்ற பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளில் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க வரிசையாக நிற்பது போல, மது பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்வதை பார்க்க முடியும்.
 
அந்த வகையில், கடந்த 13 ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. மறுநாளான 14 ஆம் தேதி சித்திரை 1 அன்று ரூ.100 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
 
சித்திரை 1 மது விற்பனையில், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகள் (பிராந்தி, விஸ்கி, ரம்) 2 லட்சத்து 14 ஆயிரம் பெட்டிகளும், பீர்பாட்டில்கள் 1 லட்சத்து 27 ஆயிரம் பெட்டிகளும் விற்பனையாகி இருக்கின்றன.
 
இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை ரூ.970 கோடிக்கு, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகள் மற்றும் பீர்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், மது விற்பனையும் வழக்கத்தை விட 10 சதவீதம் கூடுதலாக உள்ளது.
 
இன்னும் 2 நாட்கள் மது விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. 24 ஆம் தேதி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
தேர்தலை முன்னிட்டு, 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு மட்டுமல்லாமல், ஹோட்டல்களில் உள்ள பார்களுக்கும் விடுமுறை என்பதால் எங்கும் மது கிடைக்காது.
 
அன்றைய தினங்களில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :