டல்லடிக்க தொடங்கிய டாஸ்மாக் விற்பனை! – நேற்றைய வசூல் சுமார்!
தமிழகத்தில் நீண்ட நாட்கள் கழித்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்றைய வசூல் முந்தைய நாள் வசூலை விட குறைவாகவே இருந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நீண்ட காலமாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் பலரும் மதுவாங்க வெளிமாநிலங்கள் செல்வதும், தமிழகத்திற்கு மதுவை கடத்த முயற்சிப்பதும் வாடிக்கையாகி வந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது 11 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் பலர் உற்சாகமாக மது வாங்கி சென்றனர். இதனால் நேற்று முன்தினம் டாஸ்மாக் வருமானம் ரூ.164.87 கோடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று மதுபான விற்பனை சுமாராகவே இருந்துள்ளது. வழக்கம்போல சகஜ நிலைக்கு மதுப்பிரியர்கள் திரும்பியதால் அடித்து, மோதிக் கொள்ளாமல் சாவகாசமாக வந்து வாங்கி சென்றுள்ளனர். அதனால் நேற்றைய டாஸ்மாக் வசூல் ரூ.127.09 கோடியாக உள்ளது.