வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (10:25 IST)

நாளை பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்? – போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

நாளை தமிழக போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ள நிலையில் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஏற்கனவே நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் நாளை 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாத நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள போக்குவரத்து கழகம் நாளைய தினம் பணியாளர்களுக்கு எந்த விடுப்பும் வழங்கப்படாது என்றும், ஏற்கனவே அளித்த விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. அதையும் மீறி நாளை விடுப்பு எடுக்கும் பணியாளர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.