வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 ஆகஸ்ட் 2014 (07:14 IST)

குண்டர்கள் சட்டத் திருத்த மசோதாவால் சர்ச்சை

தமிழகத்தின் தடுப்பு காவல் சட்டமான குண்டர் தடுப்பு சட்டத்தில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும் மசோதா ஒன்றை இன்று திங்களன்று தமிழக அரசு சார்பில் மாநில சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஒரே ஒரு குற்றத்தை மட்டும் புரிந்தவர்களைக்கூட ஒரு ஆண்டு காலம் வரை தடுப்பு காவலில் வைக்கும் அதிகாரம் காவல் துறையினருக்கு அளிக்கப்படுகிறது.

அந்த மசோதாவின் மற்ற திருத்தங்களின்படி சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்கள் புரிபவர்களும் பாலியல் குற்றங்கள் புரிபவர்களும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
இந்த புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால், தற்போது நடைமுறையில் உள்ள குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்து குற்றம் புரியும் பழக்கம் உடையவர்கள் கைது செய்யப்படும் முறை மாறி, பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கருதப்படும் குற்றத்தை ஒரே ஒரு முறை புரிந்தால் கூட அந்த சந்தேக நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்.
 
தனி நபர் சுதந்திரம் பாதிக்கும் என்கின்றனர் மனித உரிமையாளர்கள்
 
குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத சந்தேக நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைப்பது என்பது தனிநபர் சுதந்திரத்தை பாதிப்பதாகும் என்றும் தெரிவிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம், தடுப்புக் காவல் சட்டங்களால் குற்றங்கள் 
குறைவதாக எந்த புள்ளிவிவரங்களும் கூறவில்லை என்கிறார்.
 
இன்று இந்த மசோதாவை சட்ட பேரவையில் தாக்கல் செய்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர் விஸ்வநாதன், பாலியல் குற்றவாளிகளையும் தடுப்புக் காவல் வரம்பிற்குள் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தகவல் தொழில் நுட்பம் வேகமாக பரவுவதன் அடிப்படையில் கணினி மற்றும் இணையக் குற்றங்கள் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சத்தை அளிக்கும் வகையில் பலம் மிக்கதாக மாறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
 
இவ்வாறு சைபர் கிரைம் எனப்படும் கணினி மற்றும் இணையவழிக் குற்றங்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் பல இணைய ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
சமூக வலைத்தளங்களில் ஒருவரைப் பற்றி அவதூறு விளைவிக்கும் கருத்துக்களை பதிவு செய்வதிலிருந்து, இணையம் மூலம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிதி ஆதாரங்களை பாதிப்பது வரையிலான பலவகையான இணைய குற்றங்களையும் சைபர் கிரைம் என்றே அழைப்பார்கள்.
 
எனவே‘இணைய குற்றம் அல்லது சைபர் கிரைம் என்பதற்கு தெளிவான வரையறை ஒன்று இல்லாத நிலையில் இந்த புதிய சட்டத்திருத்தம் அந்த சட்டத்தை காவல் துறை துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளையே உருவாக்கும் என்று கூறுகிறார், ‘இந்திய இணைய சமூகம்’ என்ற அமைப்பின் தலைவர் வி.ராஜேந்திரன்.