திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (15:22 IST)

மோடி ஸ்டைலில் நாடு நாடாக சுற்றிவரும் தமிழக அமைச்சர்கள் – காரணம் என்ன?

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கும் பயணித்த பிரதமர் மோடியின் பாணியில் தமிழக அமைச்சர்களும் அரசியல்ரீதியான பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.

பிரதமராக மோடி பதவியேற்றது முதல் பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறை பயணங்களை மேற்கொண்டார். அதன் மூலமாக மற்ற நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், முதலீடுகளையும் கொண்டு வந்தார். தற்போது இதே பாணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கவர்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணமாகி உள்ளார்.

அவரோடு அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றுள்ளார். பிரிட்டனில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அமெரிக்கா செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அமெரிக்கா செல்ல இருக்கின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அரசு முறை பயணமாக பின்லாந்துக்கு சென்றிருக்கிறார். மேலும் கடம்பூர் ராஜு, நிலோபர் கபில் ஆகியோர் ஏற்கனவே வெளிநாடு பயணங்களை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

வன உயிரின பூங்காக்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து அறிந்து கொள்வதற்காக சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள உயிரியல் பூங்காக்களை பார்வையிட சென்றிருக்கிறார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அனைத்து அமைச்சர்களும் அரசுமுறை பயணமாகவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மோடி உலகமெல்லாம் சுற்றிவந்து இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது போல், தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் தமிழகத்தை உயர்த்தினால் அது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுவதற்கு உதவியாக இருக்குமென தீவிரமாக அதிமுக அமைச்சர்கள் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.