1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:04 IST)

10 வருஷத்துல சீமை கருவேல மரமே இருக்காது..! – தமிழக அரசு அதிரடி!

Karuvela maram
தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் சீமை கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமை கருவேல மரங்கள் தண்ணீரை அதிகளவில் உறிஞ்சுவதுடன், காற்றின் ஈரபதத்தையும் ஈர்ப்பதால் அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அரசும் அவ்வபோது கருவேல மரங்களை அகற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிய வழக்கு ஒன்றில் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட 200 ஹெக்டேர் பரப்பளவில் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீமை கருவேல மரங்களை படிப்படியாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக அகற்ற கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கடுத்த 5 ஆண்டுகள் அவை மீண்டும் வளராமல் கண்காணிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.