1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2020 (08:48 IST)

இனிமேல் மாஸ்க் அணியாதவர்கள் மேல் கடும் நடவடிக்கை! – தலைமை செயலர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ள நிலையில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலர் புதிய உத்தரவுகளை வழங்கியுள்ளார்.

அதன்படி, கொரோனா பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க முழு கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக சென்னை, கோவை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது. கொரோனா பரிசோதனையில் பாஸ்ட்டிவிடி ரேட் 2 சதவீதத்திற்கும் கீழ் இருக்க வேண்டியதை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும்.

கொரோனா விதிமுறைகளின்படி மாஸ்க் அணிவது கட்டாயமாக இருந்தாலும், பொது விழாக்கள், திருமணங்கள், கோவில் விழாக்கள் என பல இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவதில்லை.

இப்படியாக விதிமுறைகளை பின்பற்றாத மண்டப உரிமையாளர்கள், தனிநபர், திருமணம் நடத்துபவர்கள் ஆகியவர்களுக்கு அபராதமும், தேவைப்பட்டால் கடுமையான தண்டனையும் வழங்கலாம்.

மழைக்காலம் மற்றும் அதை தொடர்ந்து வரும் குளிர்காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கலெக்டர்கள் கவனமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.