1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 18 நவம்பர் 2015 (01:31 IST)

வெள்ளத்தால் வேலைவாய்ப்பை இழந்த குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

தமிழ்நாட்டில், கனமழை காரணமாக வேலைவாய்ப்பை இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த தீவிரக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆந்திரத்தை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதால் சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் மழையின் தீவிரம் குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனால், மழை, வெள்ளத்தின் பாதிப்புகள் சற்றும் குறையவில்லை.
 
சென்னை மாநகர மக்கள் கடந்த காலங்களில் அனுபவிக்காத கொடுமைகளை கடந்த ஒருவாரமாக அனுபவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை இன்னும் வெள்ளக்காடாகத் தான் காட்சியளிக்கிறது.
 
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகள் உடைந்ததால் அவற்றிலிருந்து வெளியேறிய நீர் சூழ்ந்ததால் சென்னை அம்பத்தூர், கொரட்டூர், கொளத்தூர், வேளச்சேரி, மேடவாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன.
 
வேளச்சேரியில் சில பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் தளம் மூழ்கும் அளவுக்கு மழை நீரும், ஏரிகளில் இருந்து வெளியேறிய தண்ணீரும் சூழ்ந்திருக்கின்றன. அங்குள்ள வீடுகளில் சிக்கித்தவிக்கும் மக்களை படகுகள் மூலமாகக் கூட வெளியேற்ற முடியவில்லை. சில இடங்களில் தவித்த மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கபட்ட நிலையில், மீதமுள்ள மக்களை மீட்பதற்காக இந்திய ராணுவத்தினரை அழைக்கும் அளவுக்கு வெள்ளத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது.
 
பேரிடர் ஏற்படும் போது அதை எதிர்கொள்வதற்கான குறைந்த அளவு கூட தயார்நிலை கூட தமிழக அரசிடம் இல்லை என்பதைத் தான் கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. பருவமழை தொடங்குவதற்கு முன்புவரை சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 5% அளவுக்கு கூட தண்ணீர் இல்லை.
 

இதனால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியாத நிலை தான் காணப்பட்டது. ஆனால், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அவற்றுக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மட்டும் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் அடையாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
 
இதனால் விலை மதிப்பற்ற குடிநீர் வீணாவதுடன் அடையாற்றின் கரைகளில் வாழ்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் பூண்டி ஏரியிலிருந்தும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
 
சென்னையில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும்போது கூடுதலாக கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தும் வகையில் கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்து வருகிறேன். ஆனால், தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்துவரும் கட்சிகளுக்கு மக்கள் நலனில் அக்கறையோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ இல்லை.
 
அதனால் தான் கூடுதலாக பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் கட்டமைப்புகள் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்படுத்தப் படவில்லை. அதன்விளைவு மழை இல்லாத காலங்களில் வறட்சியையும், மழைக் காலங்களில் வெள்ளத்தையும் அனுபவிக்க வேண்டிய அவல நிலைக்கு சென்னை மாநகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா, வேனில் இருந்தபடியே,‘‘ வாக்களப் பெருங்குடி மக்களே என்பதில் தொடங்கி எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!’’ என்பது வரை பேசி தேர்தல் பிரச்சாரம் செய்து திரும்பியிருக்கிறார்.
 
இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர் என 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குச் சென்ற ஜெயலலிதா ஒட்டுமொத்தமாக மூன்று பேரிடம் கூட வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறியவில்லை. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க திரண்டு வந்த போதிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவை  நெருங்க விடாமல் அவர்களை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் விரட்டியடித்தனர்.
 
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் லட்சக்கணக்கான ஏழை மக்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. எனவே, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த அனைத்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தலா ரூ.5,000 வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.