திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (13:26 IST)

தமிழகத்தை புரட்டி போடும் மழை! வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று மாலையிலிருந்து பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த ஷேக் அலி என்பவர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னைக்கு அருகே உள்ள தாம்பரம் பகுதியில் உள்ள பல தெருக்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகே உள்ள அறந்தாங்கியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குரி, திருநெல்வேலி பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாஞ்சோலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அணை ஒரேநாளில் 8 அடி நீர்மட்டம் உயர்ந்து 92 அடியை எட்டியுள்ளது.

தமிழகம் முழுவதும் மழை வெள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.