புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 ஜூன் 2019 (10:21 IST)

கிடைத்தது தங்கமா? பித்தளையா? காலம் சொல்லும்; தமிழிசை நக்கல் டிவிட்!

திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா? பிழைக்க வந்த பித்தளையா? என்பதை காலம் உணர்த்தும் என தங்க தமிழ்ச்செல்வனின் வருகை குறித்து தமிழிசை பதிவிட்டுள்ளார். 
 
டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மன கசப்பால் அமமுகவில் இருந்து விரைவில் விலக்கப்பட்ட (விலகிய) அமமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். 
 
திமுகவில் இணைந்த பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்த போது, தமிழகத்தை திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமேக் காப்பாற்ற முடியும் என மக்கள் தேர்தல் மூலம் சொல்லியுள்ளனர். எனவே, மக்களின் தீர்ப்பை மதித்து நான் திமுகவில் இணைந்துள்ளேன். பாஜக இயக்குவதால் மானம் கெட்டு மறுபடியும் அதிமுகவில் இணைய விருப்பமில்லை. அதனால்தான் திமுகவில் இணைந்தேன் என தெரிவித்தார். 
இந்நிலையில் இதை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, தங்க தமிழ்செல்வன் திமுகவில் சேர்ந்தார்... செய்தி... நேற்றைய ஹீரோ - இன்று ஜீரோ - நாளை யாரோ? 
 
அதிமுகவை பாஜக இயக்குவதால் திமுகவில் சேர்ந்தாராம்? ஸ்டாலின் ஆளுமை அழைத்ததாம்? அதிமுகவில் மீண்டும் சேர அங்கே எதிர்ப்பு அனுமதி கிடைக்கவில்லை என்பதே ஊரறிந்த உண்மை. இதில் எங்கே பாஜக இயக்குகிறது?
அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல் உற்றுழித்தீர்வார் உறவல்லவர்! ஆட்சி மாற்றம் வரும்! வரும்! என தினமும் ஆரூடம் சொல்லிய திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா? பிழைக்க வந்த பித்தளையா? என்பதை காலம் உணர்த்தும் என தெரிவித்துள்ளார்.