செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 19 அக்டோபர் 2016 (13:06 IST)

அஞ்சி, அஞ்சி, ‘கஞ்சி’ சாப்பிட்ட கருணாநிதி: போட்டு தாக்கும் தமிழிசை!

அஞ்சி, அஞ்சி, ‘கஞ்சி’ சாப்பிட்ட கருணாநிதி: போட்டு தாக்கும் தமிழிசை!

திமுக தலைவர் கருணாநிதி மதசார்பற்ற தலைவரா அல்லது இந்து மத சார்பற்ற தலைவரா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி தசரா விழாவில் கலந்து கொண்டது குறித்து விமர்சித்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 
 
அவரது அறிக்கையில், மரியாதைக்குரிய மூத்த தலைவர் கருணாநிதி நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தசரா விழாவில் கலந்து கொண்டதையும், ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னதையும் விமர்சித்து மதசார்பற்ற நாட்டில் எப்படி மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்?, எப்படி கோஷமிடலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார். சிறந்த அரசியல்வாதியும், அனுபவசாலியுமான கருணாநிதிக்கு மிக நன்றாக தெரியும் அவர் சொல்வது தவறு என்று.
 
ஓட்டிற்‘கஞ்சி', சில மதத்தினற்‘கஞ்சி', ‘கஞ்சி' சாப்பிடுவது, அதுவும் முதலமைச்சராக இருந்தபோது அஞ்சி, அஞ்சி, ‘கஞ்சி' சாப்பிடச் சென்றது மதச்சார்பின்மையா?. நான் அந்த நடைமுறையையோ மேற்கொள்ளும் மதத்தை விமர்சிக்கவில்லை. ஆனால் அவர்களையே ஏமாற்ற அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தான் மதசார்பற்றவர் என்று காண்பிப்பதற்கு அவர்களின் நம்பிக்கையை இவர் பயன்படுத்துகிறார். ஆனால் தான் சார்ந்திருக்கும் மதம் சார்ந்த விழாவில் பிரதமர் கலந்து கொள்வது எப்படி மத உணர்வை தூண்டுவதாக அமையும்?.
 
மன்மோகன்சிங், சோனியா போன்றவர்கள் இதே தசரா விழாக்களில் ஆளும் கட்சியாக இருக்கும்போது கலந்து கொண்டிருக்கிறார்களே?. ஏன் மன்மோகன்சிங் தான் பின்பற்றும் நம்பிக்கையின் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று வழிபாடு நடத்தினாரே?. அப்படி என்றால் ஒரு மதசார்பற்ற நாட்டைச் சேர்ந்தவர் ஏன் அங்கே சென்றார் என்று கேள்வி எழுப்பினீர்களா?.
 
அதேபோல் தாங்கள் முதலமைச்சராக இருந்தபோது, கிறிஸ்துமஸ், பக்ரீத், ரம்ஜான் வாழ்த்துகள் சொல்லும் நீங்கள் ஏன் தீபாவளி வாழ்த்துகள் சொல்லுவதில்லை. அப்படி என்றால், நீங்கள் மதசார்பற்ற தலைவரா? அல்லது இந்து மதசார்பற்ற தலைவரா? என்பது எங்களின் கேள்வி மட்டுமல்ல மக்களின் கேள்வியாகவும் இருந்து கொண்டிருப்பதை தாங்கள் மறுக்க முடியுமா?. என அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ள தமிழிசை மக்கள் கருணாநிதியின் குற்றச்சாட்டை புறந்தள்ளுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.