சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பெண் என்ஜினியரான சுவாதிக்கு 25 பிறந்த நாளான இன்று, அவரின் சகோதரி எழுதியதாக இணையத்தில் ஒரு கடிதம் பரவி வருகிறது.
கடந்த ஜீன் மாதம் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் குற்றவாளி இல்லை என்றும், உண்மை குற்றவாளியை மறைக்க போலீசார் முயல்கிறார்கள் என்று ராம்குமாரின் குடும்பத்தினரும், அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் என்பவரும் தொடர்ந்து கூறிவந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, சிறையில் ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் தரப்பில் கூறப்பட்டது. எனவே, சுவாதி கொலை செய்யப்பட்டது முதல், ராம்குமார் மரணம் அவரை பல மர்மங்களும், சந்தேகங்களும் இந்த வழக்கில் நிரம்பிக் கிடக்கிறது.
இந்நிலையில், சுவாதிக்கு இன்று 25வது பிறந்த நாள் எனவும், அவரது சகோதரி நித்யா எழுதியதாக ஒரு கடிதமும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஒரு அதிர்ஷ்டமுள்ள பெண் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். ஒருநாள் அவளுக்கு தங்கை பிறக்கப் போகிறாள் என்று அவளின் தோழிகள் கூறினார்கள். இதனால் அவள் மிகவும் சந்தோஷமாக இருந்தாள். தன்னுடைய தங்கை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று அவள் கடவுளிடம் வேண்டிக் கொண்டாள். அதுபடியே ஒரு செப்.29ம் தேதி அவளுடைய தங்கை பிறந்தாள். இது அவள் வாழ்வில் மறக்க முடியாத தருணம்.
தங்கையின் வருகையால் அவள் மிகவும் சந்தோஷமாக இருந்தாள். அவர்கள் இருவருக்கும் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் மிகவும் பிடிக்கும். அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டாலும், அவர்களுக்குள் இடையில் ஒருவரும் வர அனுமதித்ததில்லை. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததும் இல்லை. அவர்கள் வாழ்க்கையில் பல திருப்பங்களும், சில சிக்கல்களும் எழுந்த போது பெற்றோர்களின் துணையோடு அவர்கள் அதை சரி செய்தார்கள். நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஓடியது. காலம் அவர்களின் பொறுமையை சோதித்து. ஆனால், ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து அதை சமாளித்தாரகள்.
ஒருநாள், ஒரு போலீஸ் அதிகாரி அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து, அவளின் தங்கை கொலை செய்யப்பட்டதாக கூறுகிறார். அது தன்னுடைய தங்கையாக இருக்கக்கூடாது என்று நினைத்து அவள் அந்த இடத்திற்கு ஓடினாள். அவளின் பிரார்த்தனைகள் தோற்றுப்போனது. அது அவளின் தங்கைதான். ஒரு சிறு ரத்த காயத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாதவள், ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிறாள். அவளுக்கு உதவ யாருமே முன்வரவில்லை.
பல துயரங்களையும் தாண்டி, தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப அவளின் குடும்பத்தினர் போராட வேண்டியிருந்தது. அவளை பற்றியும், அவளின் குடும்பத்தை பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. இது அவளின் குடும்பத்திற்கு வலியை கொடுத்தது. ஆனால், ஒரு நாள் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எல்லாவற்றையும் காலம் மாற்றும் என்ற நம்பிக்கையோடு, இப்போது அந்த குடும்பம் அழிவிலிருந்து மீண்டு வருகிறது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் உனக்கு.. முடிந்தால் ஏதேனும் ஒரு வகையில் எங்களிடம் மீண்டும் வா... உன்னை இழந்து கொண்டிருக்கிறோம்.. உன்னை மிகவும் நேசிக்கிறோம்..” என்று அந்த அதில் கூறப்பட்டுள்ளது.