1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 2 ஜூலை 2016 (16:09 IST)

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமாரை கைது செய்த பரபரப்பு நிமிடங்கள்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தி கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி ராம்குமார் என்ற நபரால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர் யார் என தெரியாமல் தீவிர விசாரணை நடத்தி வந்த காவல் துறை இன்று அவரை கைது செய்தது.


 
 
சூளைமேடு பகுதியில் ஒரு மேன்சனில் தங்கியிருந்த ராம்குமார் சுவாதியை கொலை செய்துவிட்டு அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரம் சென்றார்.
 
மேன்சன் காவலாளி மூலம் ராம்குமார் குறித்து தகவலை பெற்ற காவல் துறை மேன்சனில் விசாரணை நடத்தி ராம்குறித்த தகவலை சேகரித்து அவர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து, மீனாட்சிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
மீனாட்சிபுரம் காவல் நிலைய காவலர்கள் மப்டியில் ராம்குமாரை நோட்டமிட்டு அவர் அங்கு இருப்பதை உறுதி செய்து சென்னைக்கு தகவல் அனுப்பினர். இதனையடுத்து ராம்குமாரை கைது செய்ய உடனடியாக நெல்லைக்கு விரைந்தது தனிப்படை.
 
ரயில்வே காவல்துறை அதிகாரிகள் பாஸ்கர், டி.எஸ்.பி. சங்கர்‌, தென்காசி காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன்‌ மற்றும் தனிப்படை போலீசார் நேற்றிரவு 10 மணி அளவில் ராம்குமாரின் இல்லத்தை சுற்றி வளைத்தனர்.‌
 
அவரது வீட்டை காவல் துறை சுற்றிவளைத்த போது அங்கிருந்த நாய் குலைத்ததால் ராம்குமார் மற்றும் அவரது தாத்தா தூக்கத்தில் இருந்து முழித்துவிட்டனர். காவலர்கள் கைது செய்ய வருவதை அறிந்த அவரது தாத்தா குரல் எழுப்பியுள்ளார்.
 
இதனையடுத்து ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக ராம்குமாரின் வீட்டில் தடாலடியாக நுழைந்த காவல் துறை தற்கொலைக்கு முயன்ற ராம்குமாரை தடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரைந்தனர்.
 
இரவு 11:40 மணிக்கு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ராம்குமார். முதல் கட்ட சிகிச்சை முடிந்த பின்னர் மேல் சிகிச்சைக்காக 12:50 மணியளவில் தென்காசியில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
1:40 மணிக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அதிகாலை 3:15 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் காலை 5 மணிக்கு ராம்குமார் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.
 
பின்னர் அவரிடம் பேசிய காவல் துறை வாக்குமூலம் வாங்கியதாகவும், தான் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.