திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 2 ஜூலை 2016 (10:42 IST)

சுவாதி கொலையாளி நெல்லையில் கைது

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினர் கைது செய்ய முயன்ற போது ராம் குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.


 
 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24 ஆம் தேதி காலை இளம்பெண் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 10 தனிப்படைகள் அமைத்து காவல் துறை கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
 
சிசிடிவி காட்சிகளை வைத்து சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று குற்றவாளியின் புகைப்படத்தை காட்டி தனிப்படை காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலையாளி குறித்து துப்பு துலங்கியது.
 
சூளைமேட்டை சேர்ந்த ஒரு மேன்சனில் தங்கி இருந்த ராம்குமார் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மீனாட்சி புரம் பகுதியை சார்ந்தவர். இன்று அதிகாலை காவல் துறையினர் ராம்குமாரை கைது செய்ய முயன்றபோது, அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
 
 
உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவலர்கள் செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் ராம்குமார் அபாயகட்டத்தில் இல்லை எனவும் தெரிவித்தனர். காவல் துறையினர் ராம்குமாரிடம் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
வேலை தேடி சென்னை வந்த ராம்குமார் சூளைமேட்டில் 3 மாதங்கள் அவன் தங்கியிருந்துள்ளார். அவர் மென்பொறியாளர் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.