பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி. சேகர் தலைமறைவு?
பெண்களை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம் முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், யாரையும் காயப்படுத்தும் எண்ணம் தனக்கில்லை என அவர் பேசினார்.
எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுத்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர் தலைமறைவு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.