1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2024 (10:12 IST)

திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. முக அழகிரி விசுவாசிகள் தலைமைக்கு கடிதம்..!

திமுகவிலிருந்து முக அழகிரி நீக்கப்பட்ட போது, அவருடன்  அவருடைய 9 விசுவாசிகளும், நீக்கப்பட்டனர். இந்த நிலையில், தற்போது அந்த 9 பேர்கள் தங்களை மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்ள தலைமைக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவிலிருந்து முக அழகிரி நீக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில், மு.க. அழகிரி ஒரு காலத்தில் தென் மாவட்டமே அவருடைய கையில் இருந்தது என்று கூறப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அவர் அரசியலில் இருந்து கிட்டத்தட்ட விலகிவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், திமுகவிலிருந்து முக அழகிரி நீக்கப்பட்ட போது, அவருடன் சேர்த்து அவரது ஆதரவாளர்கள் 9 பேர், மன்னன், கோபிநாதன், இசக்கிமுத்து, முபாரக் உள்பட, நீக்கப்பட்டனர். தற்போது, தங்களை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைமைக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளனர்.

அழகிரிக்கு விசுவாசமாக இருந்தாலும், தற்போது திமுக ஆதரவாளர்களாக மாறியுள்ளதாகவும், எனவே தங்களை திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும், முக அழகிரியை தனது சகோதரராக மீண்டும் முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டாலும், அரசியல் ரீதியில் அவரை மீண்டும் திமுகவில் நுழைக்க அவர் விரும்பவில்லை என்றும், அதே போல அவரது ஆதரவாளர்களையும் திமுகவில் சேர்க்க மாட்டார் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.


Edited by Mahendran